மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய பென்ஷன் திட்ட (என்பிஎஸ்) வட்டியை 14 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டம் 2004ம் ஆண்டு ஜனவரியில் கொண்டுவரப்பட்டது. இதன்பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டத்துக்காக அடிப்படை சம்பளத்தில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை மத்திய அரசு முதலீடு செய்யும்.

இந்த திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பை மேலும் 4 சதவீதம் உயர்த்தி 14 சதவீதமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் மாற்றம் இருக்காது. ஊழியர்களின் பங்களிப்புக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

இந்த திட்டத்தில் அரசு வழங்கும் 10 சதவீத பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுளளது. இதன்மூலம் ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகை வெகுவாக உயரும். இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இதனால் 36 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுவார்கள். இதற்காக நிதி மசோதாவில் மாற்றம் செய்யப்படும். 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு நியமித்த குழு ஆலோசனைப்படி நிதியமைச்சகம் வரையறை செய்துள்ளது. தற்போது உள்ள பங்களிப்பின்படி ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய தொகையில் 40 சதவீதத்தை மொத்தமாக பெற முடியும். மத்திய அரசு பங்களிப்பு 14 சதவீதமாக உயர்ந்தால் ஓய்வூதிய தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக பெற முடியும்