திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும் என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு நல் வினை நயவாதே மணாணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

பொழிப்புரை : இறைவனது திருப்பெயரான சிவாயநம என்னும் திருவைந்தெமுத்தை, என்னுடைய அறியாமையினாலே நினைந்திலேன். அருட்கலை வல்ல அறிஞர்களோடு சேரவில்லை. நற்செயல்களில் நாட்டமில்லாது இம்மண்ணுலகில் பிறந்து இறந்து மண்ணாய்ப் போவதற்கு முற்படுகின்ற இயல்புடைய என்னைச் சிறப்பு மிகுந்த பெருமான் தன் சீரடியார்களோடு சேர்ப்பித்தான். இது வியப்புக்குரியது தானே. அச் செயலை நினைந்து போற்றுவோம்.
திருச்சிற்றம்பலம்