————————–
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னால் மூன்றாம் பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியை நாள். “அக்ஷய ” என்றால் குறைவில்லாதது என்று பொருள்.இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள்.எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபார பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கிறது.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லக்ஷ்மி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்? எந்த இல்லங்களில் இருக்கிறாள்? எந்த பொருட்களை விரும்புகிறாள் என்று பார்த்தோமானால்

தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள்.

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து , வீட்டை தூய்மையாக வைத்திருக்கும், குப்பைகளை வீட்டின் முன் கொட்டாமலும், பெருக்கி கோலமிட்டு, தீபமேற்றி , வழிபாடு செய்கின்றனரோ அங்கே இருப்பாள்.
சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் நீங்காது இருப்பாள்.

வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து , குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து ,வாசனை மலர்களால் தெரிந்த மந்திரம் கூறி , பாயசம் நைவேத்தியம் வைத்து , மகாலட்சுமியை வணங்கி ,பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத , மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம் வருவாள். அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுங்களேன்.

பழைய ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மகாலட்சுமி மந்திரம் உங்களுக்காக…..

அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெரிக்கிவிட்டனர்.இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு .அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.அக்ஷய திருதியை என்றால் தங்கம் வாங்கித்தான் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள் .ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா ? இதை நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் ).

இந்த நல்ல நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்ன வென்றால் பெரியோர்களையும் பித்ருக்களையும் வணங்குவது தான் .

சத்ரு சாந்தி ‘யை பூஜிக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது

மிருத சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர்கள் அதை நிறைய ஜெபிக்கலாம்.இதனால் வியாதிகளின் வீரியம் குறையும் .

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலையிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு.இது எல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

அன்றைய தினம் ,பசித்தோருக்கு உணவு படைத்தல்,இயலாதோருக்கு உடை கொடுத்தல் , ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாத செல்வம் ,ஆயுள் , மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்.

இறைவனை வழிபடுவதோடு அன்று மனிதன் செய்யும் தானங்கள், அளப்பரிய புண்ணியத்தைத் தரும். குடை, விசிறி, எழுது கோல், தண்ணீர் பாத்திரம், வஸ்திரம், பசு மற்றும் மனித குலத்திற்கு உணவு அளித்தல் இப்படிப் பல தானங்களை செய்யலாம்.

அக்ஷய திருதியை தினத்தை “நல்லுதவி தினமாக ” கொண்டாடலாம் இது நம் முன்னோருக்கு செய்யும்
நன்றியாகும் .

அக்ஷய திருதியை தினமானது மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது

மணிமேகலைக்கு இந்நாளில் தான் அக்ஷய பாத்திரம் கிடைத்தது.அதனால் அன்று முதல் மக்களின் பசியை போக்குவதையே தன கடமையாக கொண்டிருந்தாள் .

சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் ,அட்சய திருதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று ,மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்.

இன்றைய காலகட்டத்தில் தங்கம் தேவை என்றாலும் , வியாபார உத்திக்காக சொல்லபடும் “அக்ஷய் திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும்” என்பதை சாஸ்த்திரமாக கருதுவது தான் வருந்துவதற்குரியதாகும்

Advertisements