22. அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

 

 பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம். கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா.. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.

 

23. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

 

  பொருள்: மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.

 

24. அன்றிவ் வுலக மளந்தாய் அடிபோற்றி சென்றுஅங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

 

 பொருள்: அன்று மகாபலி மன்னனிடம் தானம் வாங்கியபோது இரண்டு அடிகளால் உலகளந்த பெருமானே, உன்னுடைய திருவடிகளைப் போற்றுகிறோம். சீதையை மீட்பதற்காக தெற்கே கடல் கடந்து சென்று இலங்கையை அழித்த பெருமானே, உன் வீரத்தைப் போற்றுகிறோம். கன்றின உருவில் வந்த அசுரனையும், பழ உருவில் வந்த அசுரனையும் அழித்த உன் திருவடிகளை வணங்குகிறோம். கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து பசுக்களையும், கோகுலத்து மக்களையும் காத்த உன் கருணை குணத்துக்கு எங்களது போற்றுதல்கள். பகைவரையும் வென்று அழிக்கும் உன் கர வேலுக்கும் போற்றி. இப்படிப் பாடி உன் திருவடிகளுக்கு சேவை செய்ய வந்திருக்கும் எங்களுக்கு அருள் பாலித்து இரக்கம் காட்டுவாயாக.

 

திருப்பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

 

பொருள்: தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய். அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. வருத்தம் நீங்கி, உனது குண நலன்களைப் பாடி மகிழ்வோம்.

 

26. மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

 

 பொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.

 

Advertisements