திருப்பாவை

17. அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

பொருள்: ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக. வானத்தை ஊடுருவி, தனது ஈரடியால் உலகை அளந்த உத்தமனே எழுந்திராய். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுதிருப்பீர்களாக.
திருப்பாவை

18. உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலீ, கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்: மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய். கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்ன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார். உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக. —
 திருவெம்பாவை
17. செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!
பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர். நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக! —
 திருவெம்பாவை 18. அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கு ஒளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப் பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!
 பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது. எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி என மூன்றும் ஆனவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

Advertisements