திருப்பாவை
19. குத்து விளக்குஎரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய் மைத்தடங்கண் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய்காண் எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேல் ஓர் எம்பாவாய்
பொருள்: குத்துவிளக்கி எரிந்து கொண்டிருக்க, யானையின் தந்தத்தால் ஆன கட்டிலின் மேலே மெத்தென்ற பஞ்சு மெத்தை போல பூங்குழல் கொண்ட நப்பின்னை கண்ணயர்ந்து கிடக்க, அவரது மார்பின் மீது தலை வைத்துப் படுத்துறங்கும் நாராயணமூர்த்தியே, உன்னுடைய வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு. உனது குரலைக் கேட்க காத்திருக்கிறோம். மை தீட்டிய கண்களை உடைய நப்பின்னையே, நீ உன் மணாளனை ஒரு கணமும் பிரிந்திருக்க மாட்டாய். அவன் விழித்தெழவும் நீ அனுமதிக்க மாட்டாய். நீ இப்படி இருப்பது தகுமா.
20. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயில்எழாய் செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் செப்பன்ன மெனமுலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உககமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீர் ஆட்டேல் ஓர் எம்பாவாய்
 பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களின் நடுக்கத்தையும் கலக்கத்தையும் தீர்ப்பவனே எழுந்திராய். நேர்மையானவனே, அன்பர்க்கும் அருளும் வல்லமை உன்னிடத்தில் மட்டும்தான் உள்ளது. பகைவர்களுக்கும் அன்பையும், தன்மையையும் தரும் விமலனே, தூயவனே எழுந்திராய். குவிந்த மார்பகங்களும், சிவந்த வாயும், குறுத்த இடையும், கொண்ட நப்பின்னைப் பிராட்டியே, எங்கள் செல்வமே, தூக்கம் கலைந்து எழுந்திராய். விசிறி, கண்ணாடி உள்ளிட்டவற்றை எங்களுக்குத் தந்து, அத்தோடு உன் மணாளனையும், எங்களையும் மார்கழி நீர் ஆட்ட வருவாய். —
 21. ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
 பொருள்: வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள் வாயாக.
திருவெம்பாவை 19. உங்கையில் பிள்ளைஉனக்கே அடைக்கலம் என்று அங்(கு) அப்பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்குஒன்று உரைப்போம்கேள் எம்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எம்கண் மற்றொன்றும் காணற்க இங்குஇப் பரிசே எமக்குஎங் கோன்நல்குதியேல் எங்குஎழில் என்ஞாயிறு எமக்குஏல் ஓர் எம்பாவாய்
 பொருள்: எம் தலைவனே, உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கிறோம். கேள். நாங்கள் உன் அன்பரல்லாதாரோடு இணையக் கூடாது, உன்னைத் தவிர வேறு யார்க்கும் தொண்டு செய்யக் கூடாது. எங்களது கண்கள் இரவும், பகலும் உன்னை மட்டுமே காண வேண்டும். இவ்வுலகில் இவ்வாறே எங்களுக்கு நீ அருள வேண்டும். அப்படிச் செய்தால் சூரியன் கிழக்கைத் தவிர வேறு திசையில் உதித்தால்தான் என்ன, எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
திருவெம்பாவை 20. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியா மார்கழிநீராடேல் ஓர் எம்பாவாய்
பொருள்: எம்மைக் காக்கும் பெருமானே, உன் காலடி மலர்களை அருள்வாயாக. உன் சிவந்த திருவடிகளை அருள்வாயாக. எல்லா உயிர்களும் தோன்றக் காரணமாக இருக்கும் உனது பொற்பாதங்கள் எங்களைக் காக்கட்டும். சகல உயிர்களும் ஒடுங்குவதற்குக் காரணமாக உள்ள உனது திருவடிகள் எங்களைக் காக்கட்டும். திருமாலும், நான்முகனாலும் கூட காண முடியாத உன் திருவடிகள் எங்களைக் காக்கட்டும். நாங்கள் எல்லாம் வாழ, இன்பம் அருளும் உன் பொன் திருவடிகள் எங்ளைக் காத்தருளட்டும். —
திருப்பள்ளியெழுச்சி 1. போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே.

பொருள்: உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம். செவ்விதழ் கொண்ட தாமரை மலர்கள் உதிக்கும் சேற்றினைக் கொண்ட வயல்கள் சூழக் கிடக்கும் திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் எங்கள் சிவபெருமானே, நீடுயர்ந்த நந்திக் கொடியைக் கொண்டவனே, எமது இறைவனே, தலைவனே, எங்களுக்காக துயில் நீங்கி, உனது திருப்பள்ளியிலிருந்து எழுந்து எங்கள் உள்ளத்திற்கு வருவாயாக.

Advertisements