திருப்பாவை
 4. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு. பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும். —
 திருவெம்பாவை
4. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
 பொருள் எழுப்பும் பெண்கள்: புன்னகை தவழும் முகம் கொண்ட பெண்ணே, இன்னும் உனக்குப் பொழுது புலரவில்லையா?. தூங்கும் பெண்: வண்ணிக் கிளி போல பேசும் பெண்டிர் எல்லாம் வந்தாயிற்றா?. எழுப்பும் பெண்கள்: அனைவரையும் எண்ணிப் பார்த்து விட்டோம். நீ மட்டும்தான் உறக்கத்தில் இருக்கிறாய். இப்படியே நேரத்தை வீணடிக்காதே. இந்த உலகின் மாமருந்தே கண்ணன் தந்த வேதம்தான். அந்தக் கண்ணுக்கு இனியவனை மனம் உருகி பாடும் நேரத்தில் உன்னை எழுப்பி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நீயும் வந்து மனம் உருக கண்ணனின் புகழ் பாட வா. இல்லாவி்ட்டால் அப்படியே நித்திரையிலேயே நீடித்திரு.

Advertisements