திருப்பாவை
2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!
 பொருள்: இந்த பூமியின் வாழ்க்கையை அனுபவிப்பவர்களே பாவை நோன்புக்கு நாம் செய்ய வேண்டிய நல்லவற்றைப் பற்றிக் கேளுங்கள். திருப்பாற்கடலில் துயில் கொண்டுள்ள அந்த அரியின் திருவடிகளை போற்றி பாடுவோம். நெய் உண்ண மாட்டோம், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம். செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம். யாரிடமும், யாரைப் பற்றியும் கோள் சொல்லிப் பேச மாட்டோம். நம்மை நாடி யாசித்து வருவோருக்கு இல்லை எனக் கூற மாட்டோம். இவற்றையெல்லாம் நாம் செய்வது உய்வை அடையும் வழிக்கே என்று நினைத்து பாவை நோன்பை நோற்போம், —
 திருவெம்பாவை
2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர் சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்
 பொருள்: எழுப்பும் பெண் – சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்! உறங்கும் பெண் – நான் மட்டுமா நல்ல அணிகலன்களை அணிந்துள்ளேன். நீங்களும் கூடத்தான் அணிந்துள்ளீர்கள். சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் இவ்வளவு இகழ்ந்தா பேசுவது. விளையாட்டாக பழித்துப் பேசும் இடமா இது. எழுப்பும் பெண் – இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா? அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Advertisements