AddThis Social Bookmark Button

 “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.

நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.

இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.

உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.

இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட  உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா?  கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.

வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ஏ, பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.

தேனீ மற்றும் வி­ வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ வி­ம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

எனக்கு உடல் பருமன் உள்ளது. மலச்சிக்கலுக்காக வாழைப்பழம் சாப்பிடுகிறேன். இதனால் இன்னும் உடல் பருமானவது போல் உள்ளது. நான் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழ தோலில் மட்டுமே நார்சத்து உள்ளது. உள்ளே உள்ள பழத்தில் நார்சத்து இல்லை. மேலும் வாழைப்பழத்தின் உள்ளே உள்ள மாவுப்பொருள் உடல் பருமனை கூட்டலாம். ஆகவே வாழைப்பழத்தை உட்கொள்ளும் பொழுது மேற்தோலின் உட்புறமுள்ள நார்சத்து நிறைந்த, சற்று மென்மையும், கடினமும் கலந்த பகுதியை உரித்து சாப்பிட மலச்சிக்கலும் நீங்கும். உடல் பருமனும் கூடாது. மேலும் தோலின் உட்புறம் உடலின் ஆயுளை நீட்டிக்கும். செரடோனின் என்னும் பொருள் நிறைந்துள்ளது.

இரத்தச்சோகை இப்பொழுது பெரும்பாலானோரை பாதித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் இரத்தச்சோகையால் அவதிப்படுகின்றனர். 12 வயதை நெருங்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தச்சோகை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கம்பு, கேழ்வரகு, சோளம், வெந்தயம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பட்டாணி, உளுந்து, சுண்டைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், அனைத்து கீரைகள், பேரீட்சை, மாதுளை, ஆப்பிள், நெல்லிக்காய் போன்ற பழங்களிலும், மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மூளை போன்ற அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்தை அதிகப்படுத்தும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் இரத்தச் சோகையை தவிர்க்கலாம்.

Advertisements