நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: விரதமிருந்து சொர்க்கத்திற்கு போகும் அம்மையே, நாங்கள் பலமுறை கூப்பிட்டும் கதவைத்தான் திறக்க மறுக்கிறாய், பதில் மொழி கூடவா கூறக் கூடாது..?

புண்ணிய மூர்த்தியாகிய ராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்து விட்டானோ?

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.

திருவெம்பாவை 10. அண்ணாமலையின் பெருமை கேட்டல்

பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாதமலர்
போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழ்ன் தொண்டர் உளன்
கோதுஇல் குலத்துஅரன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!
ஏதுஅவன் ஊர் ஏதுஅவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதுஅவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்!

பொருள்: சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!

அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.

அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.

அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

Advertisements