கிறிஸ்துமஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கேக். இந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கையையொட்டி ஜப்பானைச் சேர்ந்த நகை டிசைனர் ஜின்சா டனகா 2 மில்லியன் டாலர் மதி்ப்புள்ள தங்க கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்துள்ளார்.

உலக நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போதே கிறிஸ்துவர்கள் தங்கள் வீட்டுக்கு முன்பு விளக்கு பொருத்திய நட்சத்திரங்கள், வீட்டிற்குள் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அழகு பார்த்து வருகின்றனர். ஷாப்பிங் மால்களில் ஆள் உயர கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்துள்ளனர். மரத்தைப் பார்ப்பவர்கள் அதன் அழகில் மயங்குகின்றனர். கடைகளில் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் ஒலித்த வண்ணம் உள்ளது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் ஜப்பான் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற நகை டிசைனர் ஜின்சா டனகா யாரும் எதிர்பாராவிதமாக 24 கேரட் தங்கத்தினால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்துள்ளார். தங்கம் விற்கும் விலைக்கு அதை கடையில் வைத்துப் பார்ப்பது தான் அழகு என்று மக்கள் மனதை தேற்றிக்கொள்ளும் நிலையில் டனகா தங்க கிறிஸ்துமஸ் மரத்தை செய்துள்ளார்.

இந்த தங்க மரத்தின் உயரம் 2.4 மீட்டர், எடை 12 கிலோ. மரமே தக,தகவென ஜொலிக்கையில் அதை அலங்கரிக்க சுத்த தங்கத்தாலான 50-60 இதய வடிவ தகடுகளைப் பயன்படுத்தியுள்ளார் டனகா. இந்த மரம் டோக்கியோவில் உள்ள டனகாவின் கடையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது வரும் 25ம் தேதி வரை அந்த கடையில் இருக்கும்.

இந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தங்களையும் மறந்து அங்கயே சற்று நேரம் நின்றுவிடுகின்றனர். இந்த மரத்தின் மதிப்பு 2 மில்லியன் டாலர் ஆகும். டனகா இது போன்ற விலை உயர்ந்த பொருட்களை வடிவமைப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ஜப்பான் இளவரசர் பிறந்தபோது 24 கேரட் தங்கத்தினாலான குதிரையைச் செய்தார்.

கடந்த 2010ம் ஆண்டு அபு தாபியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements