உலகிலேயே நீளமான கிறிஸ்துமஸ் ‘கேக்’ பார்க்கணுமா? சீனாவுக்கு வாங்க!

உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்கை சீனாவை சேர்ந்த 80 சமையல்காரரர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் என்றால் கேக் இல்லாமலா. கிறிஸ்துமஸ் சீசன் வந்தாலே கேக் கடைகள் படு பிசியாகிவிடும். அங்கு விற்பனையும் சக்கைப் போடு போடும். கடைகளில் பல வண்ணங்களில், பல்வேறு சுவைகளிலான கேக்குகள் வைக்கப்பட்டிருக்கும். அதை வாங்கச் செல்பவர்கள் இதை வாங்கலாமா, அதை வாங்கலாமா என்று குழம்பிவிடுவார்கள். அந்த கேக்குகளைப் பார்க்கையிலேயே வாயில் எச்சில் ஊறும்.

எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்புவோர் இருக்கிறார்கள். சீனாவைச் சேர்ந்த 80 சமையல்காரர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு நாம் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உலகமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர்கள் 1,068 மீட்டர் நீளமுள்ள கிறிஸ்துமஸ் கேக்கை தயாரி்த்துள்ளனர்.

படாங் ஷங்கிரி-லா-ஹோட்டலில் தான் உலகின் மிக நீளமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை தயாரிக்க 7 நாட்கள் ஆகியுள்ளது. வெனிலா சுவையுள்ள கேக் மீது சாக்கலேட் கிரீம் ஊற்றி அலங்கரித்துள்ளனர். 904 ஆர்கானிக் முட்டைகள், 1045 கிலோ மாவு, 209 கிலோ சர்க்கரை, 401 கிலோ கசப்புத் தன்மையுள்ள சாக்கலேட் மற்றும் 34 கிலோ தஹித்தியன் வென்னிலா ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த கேக்கை தயாரித்துள்ளனர். அதை 150 பேர் சேர்ந்து அலங்கரித்துள்ளனர்.

888 மீட்டர் நீளமுள்ள கேக்கை தயாரிக்க தான் நினைத்துள்ளனர். கேக்கை செய்து முடித்த பிறகு அளந்து பார்த்தபோது அது 1,068 மீட்டர் நீளமிருந்திருக்கிறது. இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு அந்த கேக்கை வெட்டி விற்பனை செய்யத் துவங்கினர். இதில் கிடைக்கும் பணம் ஷாங்காயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளின் கீமோதெரபி மருத்துவத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீட்டர் நீளமுள்ள கேக் தான் இதுவரை உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள் தயாரி்த்துள்ள கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements