நாளை, நவராத்திரி ஏழாம்நாளில், அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம்அமைத்து, அதன் இருபுறமும் யானை பொம்மைகள் வைக்க வேண்டும். அம்பாளின் கையில் ஜெபமாலை, கோடரி, கதாயுதம், அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுத கலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மலர் மாலை சூட்ட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவன் நமக்கென ஒரு வாழ்வைத் தந்திருக்கிறான். அது வளம் மிக்கதோ, ஏழ்மையானதோ.. எப்படி இருந்தாலும் ரசித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வைப் பார்த்து, அப்படி நமக்கு அமையவில்லையே என பொறாமைப்படக் கூடாது. இவ்வாறு நினைப்பதும், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அதை அடைய துடிப்பதும் அம்பிகைக்கு ஏற்புடையதல்ல. சொத்தைப் பறி கொடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் அக்னி பிழம்பாக மாறி, அநியாயம் செய்தவனை நிச்சயம் ஒருநாள் அழித்து விடும் என்பதை நாளைய அலங்காரம் உணர்த்துகிறது.

மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். சூரியன், சந்திரன், வாயு உள்ளிட்ட தேவர்களுக்கு கூட அங்கு இடமில்லாமல் போனது. முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். நாளை, மீனாட்சி அம்மனின் மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நாளைய நைவேத்யம்: தேங்காய் சாதம்

பாட வேண்டிய பாடல்:

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனைத் துதித்தால்
என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம்
அவளைத் தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்.
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்.

Advertisements